அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பிரதமர் நரேந்திர மோடி யின் கட்டுப்பாட்டில் இருப்ப தாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி யுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 19-ம் தேதி கடலூரில் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சின்னா ரெட்டி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அதில் பங்கேற் கின்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் முத்து கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
பூரண மதுவிலக்கை வலி யுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், சென்னை முதல் ராஜாஜி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமம் வரை 300 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் 19-ம் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இருந்து தொடங்கும் நடைபயணம், ஏப்ரல் 12-ம் தேதி நிறைவடையும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய் வார்கள். அதிமுக சார்பில் அக்கட்சி யின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அந்தந்த கட்சியின் உரிமை. அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. யார் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. தினகரன் மீது வழக்குகள் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னத் துக்கு உரிமை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். தற்போதைய நிலையில் இரட்டை இலை தேர்தல் ஆணையத்திடமும் இல்லை. அதிமுகவிடமும் இல்லை. பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரட்டை இலை யாருக்கு என்பதை அவர் முடிவு செய்ததும் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று இன்றுடன் 19 ஆண்டுகள் முடிந்துள்ளது. சோதனையான காலகட்டத்தில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.