தமிழகம்

அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட பால் விலைகள்: பொதுமக்கள் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

ஆவின் மற்றும் தனியார் பால் விலைகள் அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 1-ம் தேதி முதல் ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தியது. இந்நிலையில் முன்னணி தனியார் நிறுவனங்களும் நேற்று முதல் ஒரு லிட்டர் பால் விலையை ரூ. 4 உயர்த்தி உள்ளன. தற்போது ஆவின் நிறுவனத்தின் அனைத்து பால் வகைகளும் தனியார் பாலை விட ஒரு லிட்டர் ரூ.7 முதல் ரூ. 6 வரை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலின் விலை அடிக்கடி விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமைந்தகரை பகுதியில் டீ கடை வைத்துள்ள குமார் என்பவர் கூறுகையில், ‘‘பால் விலை உயர்ந்தவுடன் சர்க்கரை விலையும் ஒரு கிலோ ரூ. 40 ஆக உயர்ந்து விட்டது. அதே போல் டீத்தூள், காபி தூள் விலைகளும் உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. டீ வாங்க வரும் ஒரு சிலர் ரூ.8 கொடுத்து டீ வாங்க முடியாத காரணத்தால் ரூ. 5க்கு எவ்வளவு டீ தருவீர்களோ அதை மட்டும் கொடுங்கள் என்று கூறி வாங்கி செல்கின்றனர்'' என்றார்.

மேத்தா நகரை சேர்ந்த முருகன் ‘‘அரசு பால் விலையை உயர்த்தியதன் காரணமாகத்தான் தனியார் நிறுவனங்களும் உடனடியாக பால் விலையை உயர்த்தி விட்டன. அத்தியாவசிய பொருட்களான பால், சர்க்கரை, உணவு ஆகியவற்றின் விலையை அரசு உயர்த்த கூடாது'' என்றார்.

இல்லத்தரசியான சரஸ்வதி கூறும்போது, ‘‘வீட்டில் ஒரு விசேஷம் என்றால் காபி போடுவதற்கு மட்டும் ரூ. 50 செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு வேளை சாப்பாட்டுக்கு செலவாகும் தொகையை இப்போது ஒருவேளை காபி அல்லது டீ தயாரிக்க செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களைத்தான் அதிகமாக பாதிக்கிறது' என்றார்.

ரூ.40 கூடுதல் செலவு

‘‘மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் போன்ற ஜூஸ்கள் தயாரிக்க பால் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய ஜூஸ் கடைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 10 பாக்கெட் பால் தேவை. பால் விலை உயர்ந்த காரணத்தால் தினமும் ரூ. 40 கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது'' என ஜூஸ் வியாபாரி அப்பாஸ் கூறினார்.

SCROLL FOR NEXT