தமிழகம்

பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகிறது. 10, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக, பிளஸ் 2-வுக்கு மே 12-ம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். முடிவுகள் வெளி யிடப்பட்ட அடுத்த சில வினாடி களில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், மத்திய, கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்பும் முறை இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழி படிவத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்த செல் போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாண வர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிவரும் நிலையில், தமிழக மாநில பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களை தரம் உயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை யில் நடந்த இக்கூட்டத்தில் துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இனி அது கைவிடப்படும். இதே நடைமுறை மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என தேர்வு பெறும்போது, மற்ற மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடைமுறை கைவிடப்படுகிறது.

தங்கள் பிள்ளைகள் முதலிடம் பெறவில்லை என்ற ஏக்கம் பெற் றோருக்கு ஏற்படுவதை தடுக்கவும், மாணவர்கள் கல்வித்துறையில் சமநிலையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவுகளை கல்வித்துறை எடுத்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளி யிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் வழிக்கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாகும். மக்களும், மாணவர்களும் வரவேற்பார்கள் என கருதுகிறேன்.

பிளஸ் 1 பாடத்திட்டத்தை பொறுத்தவரை, முதல்வருக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அவரும் சில ஆலோசனைகளை வழங்கியுள் ளார். இன்று (நேற்று) நடந்த கூட்டத்திலும் இது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய பாடத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் வழி பயிலும் மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படு வார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அரசு செயலாளர் உதயசந்திரன், ‘‘கல்விச் செயல் பாடுகள் மட்டுமின்றி தனித்திறன் களையும் மனதில் கொண்டு சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். சிறந்த மாணவர்களை மதிப் பெண்கள் கொண்டு அளவிடத் தேவையில்லை’’ என்றார்.

10-ம் வகுப்புக்கும்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பின்பற்றப்படும் அதே நடைமுறை 10-ம் வகுப்பு தேர்வு முடிவிலும் பின்பற்றப்பட உள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறி யிருப்பதாவது:

சிபிஎஸ்இ நடைமுறை மற்றும் பெற்றோர், பொதுமக்களின் புகார்கள் அடிப்படையிலும், மாண வர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களை குறைக்கும் வகை யிலும், ஆரோக்கியமற்ற போட்டி சூழல்களை தவிர்க்கவும், நடப்பு 2016-17 கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப் பட்டு ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT