அழிந்து வரும் திராட்சை விவசாயத்தைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம், கே.கே.பட்டி, என்.டி.பட்டி, தென்பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40,000 ஏக்கருக்கு மேல் ‘பன்னீர்’ என்று அழைக்கப்படும் கருப்பு நிற திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இத்திராட்சைகள் உள்ளூர் தவிர வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
திராட்சை பயிர்களில் கருஞ்சாம்பல், இலைச்சாம்பல், வேர்அழுகல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலால் பாதிக் கப்பட்டுகிறது. எனவே திராட்சைகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தினர். இதை ஏற்று கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள்புரத்தில் பத்து க்கும் மேற்பட்ட வணிகக் கடைகளுடன் கூடிய திராட்சை குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்பட்டது.
ஆனால் இங்கு பன்னீர் திராட்சையை வைத்து சோதனை செய்தபோது அதன் தோல் மெல்லியதாக இருப்பதால் குளிச்சியை இரண்டு நாள்கூட தாக்குபிடிக்க முடியாமல் பழங்கள் அழுகின. இதனால் இந்த கிடங்கு மூடப்பட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் கே.கே.பட்டியைச் சேர்ந்த திராட்சை விவசாயி சரவணன் கூறியதாவது: சாரல் மழை பெய்தால் கூட திராட்சைகளில் நோய் தாக்குதல் ஏற்படுகிறது. சில நாட்களாக கருஞ்சாம்பல் நோய் தாக்கி வருகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 8முதல் 10 டன் வரை இருந்த திராட்சை விளைச்சல் 2 டன் ஆக குறைந்து விட்டது. வரத்து குறைவு காரணமாக கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான திராட்சை ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வால் பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் பறிக்கப்பட்ட திராட்சைகளை விற்பனை செய்ய முடியாமலும், அவற்றைப் பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அழிந்து வரும் திராட்சை விவசாயத்தைப் பாதுகாக்க புதிய குளிர்பதனக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து வேளாண் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மூடப்பட்ட திராட்சை குளிர்பதனக் கிடங்கு தற்போது வாழை குளிர்பதனக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திராட்சை குளிர்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வாழை குளிர்பதனக் கிடங்காக மாற்றப்பட்டாலும் வணிகக் கடைகள் எந்த பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.