சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்எல்ஏக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவரின் மைக், மேஜைகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.
எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அமைச்சரவை நம்பிக்கை வாக்கு கோருவதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஓபிஎஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பிலும் இதே கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். பலர் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது சிலர் பேரவைத் தலைவரின் மைக்கை உடைத்தனர்.
பேரவைத் தலைவரை சுற்றி 10-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர். அப்போது சிலர் பேரவைத் தலைவரின் சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதனால், அவையில் கடும் அமளியும் பரபரப்பும் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் அமளி தொடர்ந்ததால் அவையை பகல் 1 மணி வரை ஒத்திவைப்பதாக கூறிவிட்டு பேரவைத் தலைவர் வெளியேறினார்.
பேரவைத் தலைவர் வெளியேறி யதும் திமுக உறுப்பினர்கள் கு.க.செல்வம், ரங்கநாதன் ஆகியோர் பேரவைத் தலைவர் இருக்கையில் ஒருசில நிமிடங்கள் அமர்ந்தனர். பேரவை ஒத்திவைக்கப்பட்டாலும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்.
பேரவைத் தலைவர் ஆலோசனை
இந்த ஒரு மணி நேர இடைவெளியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோருடன் பேரவைத் தலைவர் தனது அறையில் ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனி சாமியும் மூத்த அமைச்சர்கள் செங் கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பகல் 1 மணிக்கு பேரவை மீண்டும் கூடியதும் திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். எனவே, மீண்டும் திமுக உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று கோஷமிட்டனர். பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டனர். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளி யேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
ஸ்டாலின் உட்பட 88 எம்எல்ஏக்களை அவைக் காவலர்களால் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பிற்பகல் 3 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். ஆனாலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவையிலேயே அமர்ந்திருந்தனர்.
திமுக உறுப்பினர்களை வெளி யேற்ற பிற்பகல் 2.09 மணிக்கு சுமார் 50 அவைக் காவலர்கள் வந்தனர். அவர்களால் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் 2.27 மணிக்கு சுமார் 100 அவைக் காவலர்கள் பேரவைக்குள் நுழைந்தனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பேரவை யின் மையப் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் அனை வரையும் அவைக் காவலர்கள் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற் றினர்.
அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட பலரின் சட்டைகள் கிழிந்தன. ஐ.பெரிய சாமியை காவலர்கள் மேலே தூக்கிய போது அவரின் வேட்டியும் கிழிந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது. 2.38 மணிக்கு திமுக உறுப்பினர்கள் அனை வரும் வெளியேற்றப்பட் டனர். பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளி யில் ஈடுபட்டபோதும் இருக் கையை விட்டு அகலாமல் அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். பேரவை ஒத்திவைக்கப் பட்ட போதும் இருக்கை யிலேயே அமர்ந்திருந்தனர்.