படிமப் பாறை (சேல் கேஸ்) எரிவாயு திட்டப் பிரச்சினை குறித்து தனது நிலைப்பாட்டை தமிழக அரசு அடுத்த விசா ரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படிமப் பாறை எரிவாயு திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜோதிமணி, சுற்றுச்சூழல் நிபுணர் ராவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவராஜசேகரன் ஆகியோர் வாதிட்டதாவது:-
காவிரி டெல்டாவில் குத்தாலம் என்ற இடத்தில் படிமப் பாறை எரிவாயு எடுப்பதற்காக விண்ணப்பித்தது குறித்து மத்திய அரசு இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது வரை கிடைத்த புள்ளி விவர ஆதாரங்களின்படி இத்திட் டத்தை அனுமதித்தால், சுற்றுச் சூழல் மாசுபட்டு நாசமாவதைத் தடுக்க முடியாது.
ஓஎன்ஜிசி நிறுவனம், எண்ணெய் எடுக்கிறோம் என்ற போர்வையில் அனுமதி இல்லாமலேயே ஆழத்தில் உள்ள பாறைகளை உடைத்து படிமப் பாறை எரிவாயு எடுப்பதற்காக ஒத்திகை பார்த்து வருகிறது.
இப்பிரச்சினையில், மீத்தேன் எரிவாயு திட்டத்தில் எடுத்த முடிவைப் போலவே ஒரு நிபுணர் குழுவை அமைத்து காவிரி டெல்டாவைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை இத்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜோதிமணி, படிமப் பாறை எரிவாயு திட்டம் தொடர்பான பிரச்சினையில் தகுந்த நிபுணர்களிடம் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை அடுத்த விசாரணையின்போது தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.