தமிழகம்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கத் தவறிய பொதுப்பணித் துறை அமைச்சர் ராஜினாமா செய்க: முத்தரசன்

செய்திப்பிரிவு

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கத் தவறிய தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 10 அடி உயர தடுப்பணையை ஆந்திர அரசு கட்டி வருகிறது. ஏற்கெனவே பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என ஆந்திர அரசுக்கு மத்திய நீர்வளத் துறையும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வாணியம்பாடி அருகே ஆந்திரம் தடுப்பணை கட்டி வருகிறது. இந்தத் தகவல் 10 நாட்களுக்கு முன்பாகவே பொதுப்பணித் துறை அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகக்க கூறப்படுகிறது. அமைச்சர் என்ற முறையில் இப்பிரச்சினையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அத்துமீறி தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அமைச்சர் தடுப்பணை கட்டுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடந்த தவறுக்கு பொறுப்பேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT