வறட்சி நிலை குறித்த ஆய்வுக்காக புதுச்சேரி வந்துள்ள மத்திய குழு இரு அணிகளாக பிரிந்து ஓரே நாளில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த 2016 நவம்பரில் வழக்கமான மழையில் மூன்றில் ஒரு சதவீதம் மட்டுமே பொழிந்தது. இதனால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கு நிபுணர் குழுவை அனுப்பி, ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார். மேலும் வறட்சி நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில் மத்திய வேளாண்துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான குழு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு வந்தனர். இக்குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண்துறை இணைச் செயலர் ராணி குமுதினி தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழு புதுச்சேரியிலும், மத்திய எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் பொன்னுசாமி தலைமையில் 5 பேர் கொண்ட மற்றொரு குழு காரைக்காலிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு, தொண்டமாநத்தம், ராமநாதபுரம் பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயி சீனிவாசன் என்பவர் கூறுகையில், “வழக்கமாக 8 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடுவேன். ஆனால் பருவமழை பொய்த்ததால் வெறும் 3 ஏக்கரில் மட்டுமே பயிர் சாகுபடி செய்தேன். ஆனால் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டதால் பயிர்கள் காய்ந்து விட்டன. ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தேன். கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது” என கேட்டார்.
விவசாயி சுப்பராயன் கூறுகையில், “வறட்சியால் பல விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளோம்” என்றார்.
பின்னர், மத்திய குழுவினர் காட்டேரிக்குப்பத்துக்கு சென்று அங்கு வயலில் காய்ந்திருந்த கரும்பு பயிர்களை பார்வையிட்டனர். விவசாயி அப்துல் ஹயத் என்பவரது நிலத்தை பார்வையிட்டனர். அப்போது அவர் கூறுகையில், “ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிட்டியது போய் தற்போது 30 டன் கூட கிடைப்பதில்லை. 400 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தோம். மழை பொய்த்ததால் 55 ஆழ்குழாய் கிணறுகள் காய்ந்து விட்டன. மோட்டாரும் பழுதடைந்து விட்டன” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து சோரப்பட்டு கிராமத்தில் காராமணி சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை பார்வையிட்டனர். அங்கு பெண் விவசாயி கிருஷ்ணவேணி கூறுகையில், “100 ஏக்கரில் காராமணி சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி விட்டன” என தெரிவித்தார்.
தற்போது வறட்சி நிலவி வரும் நிலையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு மத்திய குழு, நூறு நாள் வேலை திட்டத்தில் அவற்றை தூர்வார ஏற்பாடு செய்யலாம் என தெரிவித்தது.
இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் கூறியதாவது: சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் 35 சதவீதம் மேல் பாதிப்பு இருந்தால் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதலாகும். இக்குழு மத்திய அரசுக்கு வறட்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்வர். அதனடிப்படையில் மத்திய அரசு புதுச்சேரிக்கு நிவாரணம் வழங்கும் என தெரிவித்தனர்.
தமிழ் கலந்த தெலுங்கில் குறைகள் கேட்பு
புதுச்சேரி இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்பும். பொதுவாக அந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தற்போது வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான வேளாண்துறை இணைச் செயலாளர் ராணி குமுதினி ஆந்திராவைச் சேர்ந்தவர். இதனால் அவர் தமிழ் கலந்த தெலுங்கில் பேசி விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டார்.