சட்டப்பேரவைச் செயலராக இருந்த ஜமாலுதீனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, பேரவைச் செயலக கூடுதல் செயலர் க.பூபதி செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை செயல ராக அ.மு.பி.ஜமாலுதீன் பணியாற்றி வந்தார். பணி மூப்பு காரணமாக 2012-ம் ஆண்டு ஜமாலுதீன் ஓய்வு பெற்றார். அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஜமாலுதீனுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார்.
அந்த வகையில், இன்றுடன் ஜமாலுதீனின் பணி நீட்டிப்பு பதவிக் காலம் முடிவடைந்தது. முன்னதாக, ஜமாலுதீனை முதன்மை செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தி அவருக்கு மறு பணியமர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஓய்வூதிய பலன்கள் பெறுவதற் கான உத்தரவை பெற்றுவிட்டதாக வும், ஓய்வு பெற உள்ளதாகவும் பேரவைச் செயலக வட்டாரங் கள் தெரிவித்தன. இது தொடர் பான விவாதங்கள் தலைமைச் செயலகத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பேரவைச் செயலர் பி.தனபாலை, முதல்வர் கே.பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், புதிய பேரவைச் செயலர் நியமனம் தொடர்பாக எந்த அறிவிப்பும் நேற்று முன்தினம் வெளியாக வில்லை.
இந்நிலையில், நேற்று காலை, ஜமாலுதீனுக்கு அடுத்த நிலையில் உள்ள கூடுதல் செயலாளர் க.பூபதியை, சட்டப்பேரவைச் செயலராக நியமித்து பேர வைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.
இதையடுத்து. க.பூபதி பேர வைத் தலைவர் பி.தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, அவர் பேரவைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண் டார். இவர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை இப்பணியில் நீடிப்பார்.
பொறுப்பு செயலர்
தற்போது பேரவைச் செயல ராக நியமிக்கப்பட்டுள்ள க.பூபதி தற்காலிகமாக பேரவை பொறுப்பு செயலர் என்றே நியமிக்கப்பட்டுள் ளார். பூபதியை பேரவைச் செயலராக நியமித்ததற்கான உத்தர வில் பேரவைத் தலைவர் கையொப் பத்துடன், தமிழக முதல்வருக்கு கோப்பு அனுப்பப்படும். அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆளுந ருக்கு அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே நிரந்தர பேரவைச் செயலராக பூபதி செயல்படுவார். பேரவைச் செயலகத்தில் மட்டும், சார்பு செயலர் முதல் செயலர் வரை யிலான பணியிடங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
படிப்படியாக உயர்ந்தவர்..
மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை அருகில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் கடந்த 1960-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பூபதி பிறந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்றார். தொடர்ந்து, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாலை நேர படிப்பில் சட்டம் பயின்றார். அரசுப் பணியில் கடந்த 1985-ம் ஆண்டு சேர்ந்த பூபதி, உதவி பிரிவு அலுவலராக 1991-ல் பதவி உயர்வு பெற்றார். 2000-ம் ஆண்டில் பிரிவு அலுவலர், 2008-ல் சார்பு செயலர், 2012-ல் துணை செயலர், 2015-ல் இணைச் செயலர், கடந்தாண்டில் கூடுதல் செயலர் என சட்டப்பேரவை செயலகத்திலேயே பணியாற்றி வரும் இவர், தற்போது சட்டப்பேரவை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் முடித்தவர்களே இதுவரை பேரவை செயலர்களாக பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.