தமிழகம்

இமயமலை சிகரத்தில் ஏறி சாதித்த மதுரை பள்ளி மாணவர்கள்

செய்திப்பிரிவு

மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 3 பேர், இமயமலையில் உள்ள 22,500 அடி உயரம் கொண்ட கேதர்காந்த்தா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட், நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இதனைப் போலவே, இந்திய எல்லைக்குள் சிறிதும் பெரிதுமாக ஏராளமான இமயமலைச் சிகரங்கள் உள்ளன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்களில் பலர், ஆரம்பத்தில் இதுபோன்ற சிகரங்களில் ஏறியே தங்களை பழக்கப்படுத்திக் கொள்வார்கள். இதில் முக்கியமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்காந்த்தா சிகரம். கடல் மட்டத்தில் இருந்து 12,500 அடி உயரம் கொண்ட இந்தப் பனிச் சிகரத்தில் ஏறும் பயணக்குழுவில் முதன்முறையாக, மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

மதுரை டி.வி.எஸ். லட்சுமி பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் சௌரிஷ், மகாத்மா பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மிரல், விகாஷா சர்வதேசப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ரத்திகா ஆகியோர் இந்த மலையேற்றத்திற்காக உத்தரகாண்ட் பயணம் செய்தனர். ரயில் மற்றும் விமானம் மூலம் டேராடூன் சென்று, அங்கிருந்து இமயமலையின் மீது அமைந்திருக்கிற சாங்ரி என்ற பேரூரை அடைந்தனர். மார்ச் 10-ம் தேதி அங்கிருந்து பிரத்தியேக உடை மற்றும் காலணிகளை அணிந்துகொண்டு மலையேற்றத்தைத் தொடங்கிய அவர்கள், 4-வது நாளில் மலை உச்சியை அடைந்தனர். இதன்மூலம், கேதார்காந்த்தா சிகரத்தில் ஏறிய முதல் மதுரை மாணவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.


கேதார்காந்த்தா சிகரத்தில் ஏறும் மலையேற்ற குழுவினர்.

இதுகுறித்து மாணவர் சௌரிஷ் கூறியதாவது: இந்த மலையேற்றத்தை மறக்கவே முடியாது. மனித நடமாட்டமே இல்லாத, மிகமிக சுத்தமான பஞ்சு மெத்தையில் நடப்பது போல இருந்தது. மிகக் கொடூரமான குளிர், கால்களை இடரச் செய்யும் பனிப்பொழிவுக்கு நடுவே, மொத்தம் 24 கி.மீ. தூரம் சிரமப்பட்டு நடந்தோம். கையில் துணிமணிகள், குடிநீர், சிறு தின்பண்டம் என்று சுமார் 10 கிலோ சுமை இருந்தது. மேலே ஏற ஏற ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும் என்பதால், மூச்சுத் திணறியது.

இடையில் இரண்டு நாட்கள் அந்தப் பனி மலையிலேயே டெண்ட் அமைத்து தங்கி இருந்தோம். முன்கூட்டியே இதற்கெல்லாம் பயிற்சி எடுத்திருந்ததாலும், ஏற்கெனவே இதுபோன்ற சிகரங்களில் ஏறிய அனுபவமுள்ள ஆர். சங்கர்ராமசுப்பிரமணியன், நிகுஞ்ச், ஜபர் உள்ளிட்ட சிலரும், மலையேற்ற பயிற்சி பெற்றவர்களும் வந்ததால் சமாளிக்க முடிந்தது. ஆண்டு இறுதித் தேர்வை எழுதியுள்ள எங்களுக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தந்தது. அடுத்த ஆண்டு, இதைவிட உயரமான சிகரத்தில் ஏற வேண்டும் என்ற விருப்பமும் ஏற்பட்டிருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT