தமிழகம்

பாம்பாற்றில் புதிய அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும்: வைகோ

செய்திப்பிரிவு

பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு முனைந்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் சுமார் 8 டி.எம்.சி. தண்ணீர்தான் வருகிறது.

பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய நதிகளின் மூலம் அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. தற்சமயம், தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் 26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட திட்டமிட்டு, 03.11.2014 ஆம் நாள் திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார். இந்த அணை கட்டப்பட உள்ள பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீரில் 24 டி.எம்.சி. அளவுக்கு பாதிக்கப்படும்.

காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் கட்டப்பட்டு இருப்பதால் காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல்துறை, நீர்வளம், மின்சாரத்துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலை பெறாமலேயே அணையைக் கட்ட முடிவு செய்துள்ளது சட்டவிரோதமான செயலாகும்.

கீழ் பாசனப்பகுதி அரசின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தப் புதிய அணை கட்டும் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதி பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகும் சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்.

தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறில், பென்னிகுக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப்போன கேரள அரசு, கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்ட முனைந்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT