உள்ளத்தில் தெளிவும், வலிமையும் இருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல என்கின்றனர் தூத்துக்குடி யாழினியும், நாகர்கோவில் சிவ சண்முகராஜாவும்.
சொந்தத்தில் திருமணம்
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் யாழினி(13). இவரது தந்தை சக்திவேல். தாயார் மீனாட்சி வாய் பேச முடியாதவர். இவர்கள் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ததால், முதல் குழந்தையான யாழினி குறைபாடுடனே பிறந்தார். அவரது முதுகு தண்டுவடம் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. இதனால், இடுப்புக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படவில்லை.
தாத்தாவின் அரவணைப்பு
யாழினியின் தாத்தா சங்கரநாராயணன் ஓய்வு பெற்ற வட்டாட்சியர். யாழினி இவரது அரவணைப்பிலேயே உள்ளார். அவர் இனி தொடருகிறார்:
யாழினியை பிரபல நரம்பு மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தும், குணப்படுத்த முடியாது என கைவிரித்துவிட்டனர். இதன் காரணமாக யாழினி, 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வீட்டில் வைத்தே பாடங்களை கற்றுக் கொடுத்தேன். 10-ம் வகுப்பு பாடம் வரை இவ்வாறு கற்றுக் கொடுத்துவிட்டு, நேரடியாக எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு எழுத வைக்க நினைத்திருந்தேன்.
மருத்துவ முகாம் மூலம் வாய்ப்பு
இந்த சூழ்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமுக்கு யாழினியை அழைத்துச் சென்றிருந்தேன். மூன்று சக்கர சைக்கிள் அவளுக்கு வழங்கப்பட்டது.
சைக்கிளை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர் ராஜாசண்முகம் தான், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் யாழினியை பள்ளியில் சேர்க்கலாம் என்று தெரிவித்தார். அவரது முயற்சியால், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் யாழினியை நேரடியாக 7-ம் வகுப்பில் சேர்த்தோம். இப்போது 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், அவளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். உற்சாகமாக இருக்கிறாள். வகுப்பில் முதல் மாணவியாக திகழ்கிறாள். நிச்சயமாக வாழ்க்கையில் சாதிப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் ஆனந்தக் கண்ணீரோடு.
தலைமை ஆசிரியை பாராட்டு
யாழினி படிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜெகதீஸ்வரியை சந்தித்தோம். “பள்ளிக்கு புதியவர் போல இல்லாமல் பாடங்களை உடனே பிக்-அப் செய்து விடுவாள். பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே வகுப்பில் முதல் மாணவியாக வந்துவிட்டார்.
செஸ், கேரம், ஓவியம் போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார். கடந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழா பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றார். சக மாணவிகள் அவரை மிகவும் நேசிக்கின்றனர். வகுப்பறை மாறுவது, கழிப்பறை செல்வது போன்ற நேரங்களில் உதவுகின்றனர்” என்றார்.
கலெக்டராவேன் அங்கிள்
பள்ளி வகுப்பறையில் யாழினியை சந்தித்தோம்.
“சக மாணவிகள், ஆசிரியைகள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். தாத்தா நல்ல தூண்டுகோலாக இருக்கிறார். இப்படி இருக்கிறோமே என்ற கவலை,ஒரு நாள் கூட எனக்கு வந்ததில்லை. நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்” என உற்சாகமாக சொல்லிமுடித்தார் யாழினி.
நடக்க முடியாத போதும்…
நாகர்கோவில்,கீழராமன்புதூர் சந்திப்பில் நிற்கிறது அந்த ஆட்டோ. ஊன்றுகோல் உதவியுடன் ஒருவர், ஆட்டோவை நெருங்குகிறார். ஆட்டோ பிடித்து எங்கோ பயணிக்கப்
போகிறார் என நினைக்கும் வேளையில், யூனிபார்மை மாட்டி, ஆட்டோவை ஸ்டார்ட் செய்கிறார்.
அவர் சிவ சண்முகராஜா. சாலை விபத்தில் ஒரு காலை இழந்தவர், ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:
விபத்தில் காலை இழந்து, வேலையை இழந்தேன். ஆட்டோ ஓட்டிப் பிழைக்க முடிவு செய்தேன். முதல்ல வண்டி ஓட்டும் போது, காலு வலில துடிப்பேன். வீட்டுல குடும்பத்தை நினைச்சு பார்க்கும் போது, வலியை தாண்டுன வாழ்க்கை தெரியும். அப்படியும், இப்படியுமா கஷ்டப்பட்டு நல்லா ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.
ராணி போல பார்ப்பேன்
திருமணம் ஆனப்போ என் மனைவி முருகம்மாள், போஸ்ட் ஆபீஸ்ல பகுதி நேர ஊழியரா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ சொன்னேன்...நீ வேலைக்கு போய் கஷ்டப்பட வேணாம். வீட்டுலயே உன்னை ராணி போல வைச்சு பார்ப்பேன்னு!. அதை காப்பாற்ற, இன்னும் வேகமா ஓட ஆரம்பிச்சேன்.
ஊன்றுகோலோட நடக்குற நான், ஆட்டோவுல 4 பேரை தூக்கிட்டு ஓடுறேன். இரண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கணும். அவர்களை, மாற்றுத் திறனாளி நலத்துறை அதிகாரியாக்கணும்,” என்ற போது சிவசண்முக ராஜாவின் கண்கள் கலங்குகின்றன.