அதிமுக கட்சியும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியும் பாஜக பிடியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,
‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். எம்ஜி ஆருக்கு இருந்த செல்வாக்கும் அவருக்கு உறுதுணையாக இருந் தது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு, மத்திய அரசு அதிமுகவை தன் விருப்பப்படி செயல்பட வைக்க பல்வேறுவிதமான தந்திரங் களை செய்து வருகிறது.
ஒருபுறம் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, மறுபுறம் முதல்வர் பன்னீர்செல்வம், மற்றொரு புறம் சசிகலா என மூன்றாக பிரித்து தங்களுக்கு வசதியாக அதிமுகவை பயன்படுத்த நினைக்கிறது. குடியரசு தலைவர் தேர்தலிலும் அதிமுகவை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
தமிழகத்தில் காலூன்ற முடி யாத பாஜக இங்கு யாருடைய தயவுடன்தான் செயல்பட முடியும். அதிமுகவை 3 வகையில் பிரித்து வைத்து ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக கட்சியும், ஆட்சியும் பாஜகவின் பிடியில் இருந்து விடுபட வேண்டும். எனவே, அதிமுகவினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.
பின்னர் ஜல்லிக்கட்டு விவ காரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ‘நாங்கள் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?
கடந்த 3 ஆண்டாக பாஜக அமைச்சர்கள்தான் ஒவ்வொரு பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று பொய்யான வாக்கு றுதியை மக்களுக்கு அளித்து வந்தனர். அதில் தங்கள் தவறை உணர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
தற்போது கூட காளைகளை காட்சிப்படுத்தக் கூடாது பட்டியலில் இருந்து விலக்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். மிருகவதை தடைச் சட்டத்தில் மத்திய அரசுதான் மாற்றம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையில்லாமல் நடைபெற வழி ஏற்பட்டிருக்கும்.
ஆனால் தமிழக அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இச்சட்டம் தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்திருந்தால் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நிலை இப்படி இருக்க நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ என்றார்.