தமிழகம்

பொற்றாமரை குளக்கரையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்: 40 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட படித்துறை கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தமான பொற்றாமரை குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட படித்துறை கண்டறியப்பட்டது.

சாரங்கபாணி கோயிலுக்குச் சொந்தமான பொற்றாமரை குளம் கோயிலின் பின்புறம் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் நடுவில் ஹேமரிஷி மண்டபம் உள்ளது. குளத்துக்கு கும்பகோணம் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வர தனி நீர்வழிப் பாதை உள்ளது.

மகாமகத் திருவிழாவின்போது, பக்தர்கள் பொற்றாமரை குளத்தில் புனித நீராடுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு மகாமகத்தின்போது, இந்தக் குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள சிறிய கோபுர மண்டபங்களில் பல ஆண்டுகளாக வணிக ரீதியிலான கடைகளை சிலர் வாடகை கொடுத்து நடத்தி வந்தனர். மேலும், குளத்தின் தென்மேற்கு பகுதி, வடக்கு கரையும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடைகளை தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறநிலையத் துறையினர் முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரனின் உத்தரவுப் படி, உதவி ஆணையர்கள் ஞானசேகரன், ஜீவானந்தம், மாரியப் பன், கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், மின்வாரியத் துறையினர் நேற்று போலீஸாரின் பாதுகாப்புடன் பொற்றாமரைக் குளக்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 9 கடைகளை பொக்லைன் மூலம் அகற்றினர். அப்போது, குளத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட படித்துறை இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவி ஆணையர் ஞானசேகரன் கூறும்போது, “குளக் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 9 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்போது படித்துறை இருந்தது தெரிய வந்தது. இந்த படித்துறையை சீரமைத்து அங்கு இரும்பு கேட் பொருத்தப்படும். இதன் மூலம் பொற்றாமரை குளத்துக்கு மேலும் ஒருபாதை கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT