தமிழகம்

ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பிரமாண பத்திரத்தை ஏப்ரல் இறுதிக்குள் அளிக்க வேண்டும்: விசாரணை ஆணையத்தின் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட வர்கள் இம்மாத இறுதிக்குள் பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும் என்று இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்றனர். போராட்டத்தின் முடிவில் காவல்துறையினருக்கும், போராட் டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதை ஏற்ற தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் குறித்து பாதிக் கப்பட்ட மக்கள், நேரில் பார்த்த சாட்சியங்கள் உள்ளிட்டோர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என கடந்த ஜனவரி 23-ம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. கடந்த மாதம் வரை மொத்தம் 128 பேர் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணைக்கு இந்த ஆவணங்கள் போது மானதாக இல்லை. எனவே பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகை யில் இம்மாதம் இறுதிவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவிப்பு நாளிதழ்களில் 7-ம் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் புகாரை மனுவாக அளிக்காமல் பிரமாண பத்திரமாக அளிக்க வேண்டும். அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும். எனவே பொதுமக்கள் அச்ச மின்றி பிரமாண பத்திரம் அளிக்க முன்வர வேண்டும்.

கலவரத்தை காவலர்கள் தூண்டியதாகக் கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும். மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆணவங்களை சமர்ப்பிக்கக் கோரி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக் கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட் டுள்ளது. இந்த விசாரணை ஜுன் மாதத்தில் தொடங்கும்.

இவ்வாறு நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.

SCROLL FOR NEXT