சென்னை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறார்கள் தப்பியோடிய மற்றும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் எதிரொலியாக, கோவை கூர்நோக்கு இல்லத்தில் சிறார்களின் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறார்களிடையே மோதல் ஏற்பட்டு அதன் தொடர்ச்சி யாக 33 பேர் தப்பிச் சென்றனர். இவர்களில் 29 பேர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு மீண்டும் கூர்நோக்கு இல்லத்துக்கு கொண்டு வரப்பட் டனர். இதில் போலீஸாரால் பிடிக்கப் பட்ட 4 சிறார்கள் டியூப்லைட், பிளேடு போன்றவற்றால் தங்களது உடலில் பெற்றோர் முன்பாகவே கீறி தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் பாதுகாப்பு மற்றும் நடைமுறை செயல்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், கோவை லட்சுமி மில் சந் திப்பு பகுதியில் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லத்தில் நேற்றுமுன் தினம் உடனடியாக ஆலோசனை மையம் திறக்கப்பட்டு சிறார்களுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டது. கூர் நோக்கு இல்ல நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் சி.எம்.மாணிக்கம் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 8 கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. இதில், கோவையைத் தவிர ஏனைய மையங்கள் அனைத்தும் அரசால் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 1939-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோவை கூர்நோக்கு இல்லம் மட்டும் சிறை மீண்டோர் சங்கம் சார்பில் பராமரிக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் அடைக்கப்படுகின்றனர்.
தற்போது, இந்த இல்லத்தில் மொத்தம் 23 சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், திருப்பூரில் இருந்து 5 பேரும், கோவை மாவட்டத்தில் இருந்து 13 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கூர்நோக்கு இல்லத்தில் நடைபெற்ற பிரச்சினையைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 11) உடனடியாக ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. நீதிபதி கோபிநாத் அந்த மையத்தை தொடங்கி வைத்தார்.
இதில், எம்.ஏ. உளவியல் பயின்ற நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டு அனைத்து சிறார்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்வது குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைத்தவிர, டி.வி. பார்க்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள் ளது. உள் விளையாட்டுப் போட்டி களுக்கு ஊக்குவிக்கப்பட்டுள் ளனர். சில வெளி அரங்க விளையாட்டுகள் விளையாடவும் அனுமதிக்கப்படுகின்றனர். புத்தக வாசிப்பு தொடர்பாகவும் ஆசிரியர் ஒருவரால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தவிர, சிறார்களை அவர்களது பெற்றோர் சந்திக்கும் நேரமும், நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காலை 10 மணி முதல் 6 மணி வரை மட்டுமே அவர்களது பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, 24 மணி நேரமும் சந்திக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அனுமதிக்கப்படும் சிறார்களை ஒரு மாதத்துக்கு மேல் தங்க வைக்காமல், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை வழக்கறிஞருடன் இணைந்து ஜாமீனில் வெளியே அனுப்பி வைப்பதற்கு உதவி புரிகிறோம். அதனால், நீண்ட நாட்கள் அவர்கள் தங்க வைக்கப்படுவது இல்லை. இது போன்ற காரணங்களால் இங்கு பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.