ஐ.நா. மனித உரிமைப் பேரவை யில் அமெரிக்கா தாக்கல் செய் துள்ள தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கை இறுதிப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதுகுறித்த வரைவு தீர் மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ், மாசிடோ னியா உள்ளிட்ட 5 நாடுகள் தாக்கல் செய்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானத்தின் வாசகங்கள் தமிழர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலைகள் ஆகியவை குறித்து நம்பகமான, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதன் மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனையும், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் வழங்க முடியும். எனவே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானத்தில் இதற்கான திருத்தங்களை இந்தியா கொண்டு வரவேண்டும்.
கடந்த இரு ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்யும்படி தமிழக கட்சிகள் வலியுறுத்தியபோது கடைசி வரை இழுத்தடித்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் நேரம் இல்லாததால் இனி திருத்தம் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டது. இந்த முறையும் கடைசிவரை இழுத்தடிக்காமல் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.