சென்னை வேளச்சேரி சேவா நகரில் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சமூக நலக்கூடத்தை உடனே திறக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி சேவா நகரில் 1996-ம் ஆண்டு மிகப்பெரிய சமூக நலக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட அந்த சமூக நலக்கூடம் கடந்த சில ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் நடுத்தர மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிக்களை தனியார் மண்டபங்களில் பெரும் தொகை கொடுத்து நடத்த வேண்டியுள்ளது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக வேளச்சேரி சேவா நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
வேளச்சேரி சேவா நகரில் ஏராளமான நடுத்தரவர்க்க குடும்பத்தினர் உள்ளனர். இந்தப் பகுதியில் சுப நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்த வேண்டும் என்றால் குறைந்தது 2 கி.மீ வெளியே வந்து வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபங்களில்தான் நடத்த வேண்டியிருந்தது. எனவே, எங்கள் பகுதிக்கு சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என்று மாநகராட்சியிடம் பல முறை வலியுறுத்தியிருந்தோம்.
அதன்படி, கடந்த 1996-ல் எங்கள் பகுதியில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்காக இருந்த அந்த சமூக நலக்கூடம். 2012 முதல் மூடியே கிடக்கிறது. இதனால், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு போன்ற நிகழ்வுகளை வெளியில் உள்ள திருமண மண்டபங்களில் நடத்த வேண்டியுள்ளது. நடுத்தர வர்க்க மக்களான எங்களால் இதற்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இதனால் சுப நிகழ்வுகள் நடத்தும் சூழல் வந்தாலே சங்கடத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே, சுமார் 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் இந்த சமூக நலக்கூடத்தை உடனே திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்பிரச்சினை தொடர்பாக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில், ‘‘எங்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்ற காரணத்தாலேயே சேவா நகர் சமூக நலக்கூடம் மூடப்பட்டுள்ளது. அதை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் கூட நடத்திவிட்டோம். ஆனால், இன்னமும் திறக்கப்படவில்லை. இதனை திறக்க வலியுறுத்தி திமுகவின் வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கவுள்ளார்’’ என்றார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் 13-வது மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சம்பந்தப்பட்ட சமுக நலக்கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை எடுத்து செல்லப்பட்ட பிறகு அவை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றனர்.
சமூக நலக்கூடத்தை திறக்க வலியுறுத்தி திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கவுள்ளார்.