ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க.வை வரும் தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
மின்வெட்டுப் பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. அதேபோல் பெட் ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசை, தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. உண்மையில் தமிழக அரசு மனது வைத்தால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மத்திய அரசைக் குற்றம்சாட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பாதிப்படைந் துள்ளனர்.
விழுப்புரத்தில் மாநாடு
வரும் நாடாளுமன்றத் தேர் தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து நான் அறிவிப்பேன். இதேபோல், பிப்ரவரி மாதம் விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இலவசங்களால் பலனில்லை
தமிழகத்தில் கால்நடைகள் கோமாரி நோயால் தாக்கப்பட்டு பலியாகி வருகின்றன. அண்டை மாநிலங்களில் வாங்கப்பட்ட கால்நடைகளே இதற்கு காரணம். கடந்த ஆட்சியில் இலவச தொலைக் காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. தற்போது, அவை இருக்கும் இடம் கூட தெரியவில்லை. இலவச பொருட்களால் மக்களுக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை.
எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுப்பு
அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் மட்டுமின்றி, பத்திரிகையாளர்களும் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. லஞ்சமும் ஊழலும் அற்ற ஆட்சி வரக்கூடாது என தமிழக மக்கள் நினைத்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. வரும் தேர்தல் முதற்கொண்டே இந்த ஆட்சியை அகற்ற நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், மீனவர் பிரச்சினையையும் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் விஜயகாந்த்.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் குறித்து பேச்சு வார்த்தை நடத்த தே.மு.தி.க. அமைத்துள்ள குழுவில், இடம் பெற்றுள்ள எட்டு பேரின் பெயர் களை விஜயகாந்த் மேடையில் அறிவித்தார். அவர்கள்: வி.சி. சந்திரகுமார், எல்.கே. சுதீஷ், தேனி முருகேசன், ஆர். உமாநாத், ஜாகீர் உசேன், வி.யுவராஜ், அழகாபுரம் மோகன் ராஜ், பாண்டியன்.