தமிழகம்

கையடக்க செயற்கைக்கோள் தயாரித்து சாதனை: ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம்

செய்திப்பிரிவு

பேரவையில் முதல்வர் அறிவிப்பு

கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து நாசா மூலம் விண்ணில் செலுத்திய கரூரை சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான மாணவர் குழுவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கரூரை சேர்ந்த பிளஸ் 2 முடித்துள்ள மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக் தலைமையில் மாணவர்கள் இணைந்து, ‘கலாம் சாட்’ என்ற பெயரில் கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை தயாரித்தனர். இது அமெரிக்காவின் நாசா மூலம் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதையடுத்து, ரிஃபாத் உள்ளிட்ட மாணவர் குழுவினருக்கு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர்.

இந்நிலையில், பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் அறிவிப்பு களை வெளியிட்டு முதல்வர் கே.பழனிசாமி கூறியதாவது:

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த 18 வயது ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான 6 மாணவர்கள், 64 கிராம் எடையில் மிகச்சிறிய செயற்கைக்கோளை சமீபத்தில் தயாரித்தனர். அமெரிக்காவின் நாசா நடத்திய போட்டியில் அவர் கள் பங்கேற்றனர். அந்த செயற் கைக்கோள் உலகின் 57 நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 80 ஆயி ரம் மாதிரிகளில் முதல் பரிசு பெற் றது. முப்பரிமாண அச்சுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளுக்கு ‘கலாம் சாட்’ என்று பெயரிடப்பட்டது. நாசா ஏவுதளத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் திறன் கொண்டது.

சென்னையில் இருந்து செயல்படும் ‘ஸ்பைஸ் கிட்ஸ்’ அமைப்பு இந்த மாணவர்களுக்கு உதவியது. இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள குழுவின் தலைமை விஞ்ஞானியாக செயல்பட்ட ரிஃபாத் ஷாரூக்குக்கும், குழுவின் மற்ற மாணவர்களான யக்ஞசாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திரிவேதி, கோபிநாத், முகமது அப்துல் காசிப் ஆகியோருக்கும் தமிழக சட்டப்பேரவை, தமிழக அரசு மற்றும் என் தனிப்பட்ட சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாதனை மூலம் நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த ரிஃபாத் ஷாரூக் தலைமையிலான மாணவர் குழு, இதுபோல மேலும் பல சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்

SCROLL FOR NEXT