ரவுடி கொலை செய்யப்பட்ட வழக் கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டை விருத்தாம்பிகை நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார்(36). இவர் மீது கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதற்கிடை யில் கடந்த ஆண்டு ஆக.1-ம் தேதி வீட்டில் மனைவியுடன் டிவி பார்த்துக்கொண்டு இருந்த அசோக்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக அசோக்குமார் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வேலு, பூண்டி என்ற குழந்தைவேலு, தர்மதுரை, தர்மா என்ற தர்மராஜ், செங்கேணி, குள்ள ரவி, சூர்யபிரசாத் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அசோக்குமாரின் தந்தை குப்புசாமிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, இந்த 7 பேரும் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இது தொடர்பாக குப்புசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த இடப் பிரச்சனை காரணமாக அசோக் குமாரை கொலைசெய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.