சட்டப்பேரவையில் நேற்று சட்டம் மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத் தின்போது, குமரி மாவட்டம் இரணியல் அரண்மனையை சீரமைக்க வேண்டும் என குளச் சல் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘‘இரணியல் அரண்மனை தொடர் பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு டெண் டர் விடப்பட்டுள்ளது’’ என்றார்.
திமுக உறுப்பினர் மஸ்தான் பேசும்போது, பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் பராமரிக் கப்படாமல் உள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதி லளித்த அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், ‘‘கோட்டைச் சுவரை பராமரிக்க துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தனது பதிலுரைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘மானிய கோரிக்கை விவரங்களை அமைச்சர் அப்படியே வாசிக்க வேண்டாம்’’ என்றார்.
சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலுரை தயாரித்து எடுத்து வந்திருந்தபோதிலும், அவற்றை பார்க்காமல் 20 நிமிடங்களில் தெளிவாக தனது பதிலுரையை முடித்தார். அவர் பேசி முடித்ததும் துரைமுருகன் எழுந்து, ‘‘நன்றாக பேசினால் எந்த உறுப்பினராக இருந்தாலும் பாராட்டுவேன். அமைச்சர் சண்முகத்தின் பதிலுரை நன்றாக இருந்தது. குறிப்பில்லாமல் பேசினார். இதுபோன்று பதிலுரை அளிக்க மற்ற அமைச்சர்களுக்கு பேரவைத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும்’’ என்றார்.