சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தற் போது 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணி கள் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த பணிகளில் சுமார் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்தில் 3 புதிய வழித் தடங்களில் 105 கி.மீ. தூரத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதாவது, மாதவரத்தில் இருந்து மயிலாப்பூர் வழியாக சிறுசேரி வரையிலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வரை யிலும், நெற்குன்றத்தில் இருந்து கோயம்பேடு வழியாக வி.இல்லம் வரையிலும் என 3 வழித் தடங்களுக்கான ரயில் பாதை வரைபடங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற தமிழக அரசு முயற்சி மேற் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
சென்னை போன்ற பெரிய நகரங்களில் சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மெட்ரோ ரயில் தேவை அவசியமாகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக 3 புதிய வழித் தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளோம்.
இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜப்பான் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று திட்டப் பணிகள் தொடங்கப்படும். குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையை தவிர்க்க சுமார் 80 சதவீதம் சுரங்கப் பாதைகள் வழியாக மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என முடிவு செய்துள்ளாம்.
மெட்ரோ ரயில் திட்டம் 1-ல் கார் நிறுத்தும் இடத்துக்கு போதிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், திட்டம் 2-ல் கார் நிறுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், மக்கள் அதிகம் கூடும் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவகங்கள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.