இந்துவால் பாதங்களைத் தரையில் ஊன்றி வைக்க முடியாது. குதிகாலை உயர்த்தி, முன்னங்காலை மட்டுமே தரையில் வைக்க முடியும். அடுத்தவர் உதவியின்றி ஓரளவுக்கு நடக்கவும் முடியும். ஆனால் ஓட்டப்பந்தயக் களத்தில் காற்றைக் கிழித்துப் பறக்கிற இந்துவைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஓட்டப்பந்தயம், குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் என பல பிரிவுகளிலும் தடம் பதிக்கிறார் இந்து. வைஷ்ணவா கல்லூரியின் முதலாமாண்டு மாணவி. அப்பா ஆலயமணி, பைண்டிங் தொழில் செய்கிறார். அம்மா சுதா, மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னார்வலர்.
வாழ்க்கைப் பாடம்
இந்துவின் வாழ்க்கை நமக்கு இரண்டு பாடங்களைச் சொல்கிறது. ஒன்று, நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யக் கூடாது. இரண்டாவது, சாதிப்பதற்கு ஊனம் தடையே இல்லை. இதைத்தான் இந்துவின் அம்மாவும் சொல்கிறார்.
‘‘என் பொண்ணு பொறந்ததுமே கால் நேரா இல்லாம வளைஞ்சு இருக்குதேன்னு எக்மோர் பேபி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அங்கே மாவு கட்டு போட்டாங்க. கட்டுப் போட்டா, கால் நேரா இருக்கும். அப்புறம் பழையபடி வளைஞ்சிரும். அந்தக் காலோடயே அவ தவழ ஆரம்பிச்சா. ஒன்பது மாசம் இருக்கும்போது ரெண்டு கால்லயும் ஆபரேஷன் நடந்தது. அதுக்கு அப்புறமும் அவளோட கால் பாதம் வளைஞ்சுதான் இருந்துச்சு. இதுக்கு மேல ஆபரேஷன் செஞ்சா, ரொம்ப ஆபத்தாக்கிடும்னு சொன்னாங்க. அதனால அப்படியே விட்டுட்டோம். என் அத்தைப் பையனைத் தான் நான் கல்யாணம் செய்துகிட்டேன். ஒருவேளை அதுகூட இந்துவோட இந்த பாதிப்புக்குக் காரணமா இருக்கலாம்னு சொன்னாங்க. இவளுக்கு அப்புறம் ஒரு பையன் மூளை வளர்ச்சி குறைவா பிறந்து, ஏழு மாசத்துல இறந்துட்டான்” என்று பழைய நினைவுகளைச் சொல்லும்போதே சோகம் படர்கிறது சுதாவின் முகத்தில். அம்மாவின் சோகத்தை மாற்றப் புன்னகையோடு தொடர்ந்தார் இந்து.
‘‘என்னால மத்தவங்க மாதிரி காலைத் தரையில ஊன்றி நடக்க முடியாது. ஆனா அதைப் பத்தி கவலைப்படாம நுனி கால்லயே நடந்து பழகிட்டேன். கொஞ்சம் நடந்தாவே கால் வலிக்கும். என்ன பண்றது? அதுக்காக உட்கார்ந்துட்டே இருக்க முடியுமா?” என்று கேட்கிற இந்துவின் விளையாட்டு ஆர்வத்துக்கு, பள்ளியில் நடந்த போட்டிதான் விதை ஊன்றியதாம்.
வேர்விட்ட ஆர்வம்
‘‘நான் நாலாவது படிக்கும்போது ஸ்கூல்ல விளையாட்டுப் போட்டி நடந்தது. தயக்கத்தோடதான் அதுல கலந்துகிட்டேன். அந்தப் போட்டில நான் ஜெயிச்சதை என்னாலயே நம்ப முடியலை. அதுக்கப்புறம்தான் முழுமூச்சா விளையாட்டுல கவனம் செலுத்தினேன். அப்போதான் எங்க ஸ்கூல் மாஸ்டர் மூலம் கோச் நாகராஜ் சாரோட அறிமுகம் கிடைச்சுது. அவரோட வழிகாட்டுதல் என்னை வெற்றிகளை நோக்கி அழைச்சுட்டுப் போச்சு” எனச் சொல்கிற இந்து, இதுவரை மாநில அளவிலும், தேசிய அளவிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். அலமாரி முழுக்க மெடல்களும், சான்றிதழ்களும் நிறைந்திருக்கின்றன, கூடவே வறுமையும்.
‘‘இந்துவுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வருது. வெளியூருக்குப் போகவே இவங்க சித்தப்பாவையும் மத்தவங்களையும் நம்பியிருக்கோம். இதுல வெளிநாட்டுக் கனவு நிறைவேறுமா?” ஏக்கத்துடன் கேட்கிற அம்மாவின் கரம் பிடித்து சமாதானப்படுத்துகிற இந்து, அடுத்தப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுகிறார்.