தமிழகம்

கோவை ஈஷா யோகா மைய விவகாரம்: ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் ஆட்சியரிடம் மனு

செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையத்தில் கட்டுமானங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், யோகா மையம் மீது அவதூறு பரப்புவோர் மீது கைது நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலையையும், பல்லாயிரம் சதுரடி பரப்பளவில் கட்டிடங்களும் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. நொய்யல் நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த மையம் உள்ளது. இப்பகுதி, மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளதால், உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டவோ கூடாது. 10-க்கும் மேற்பட்ட துறைகளிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்

கட்டுமானப் பணிகளை நிறுத்த நகர ஊரமைத்துறை இயக்குநர் உத்தரவிட்டும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 112 அடி உயர சிலையும் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது. மலைதளப் பாதுகாப்புக் குழுவின் மாவட்டத் தலைவரான மாவட்ட ஆட்சியர், இதற்கு அனுமதியளித்துள்ளதை கண்டிக்கிறோம். சிலைக்கும், கட்டிடங்களுக்கும் கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்து, அனுமதி பெறாத கட்டிடங்களை இடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி - தமிழகம் தலைவர் அர்ஜுன் சம்பத், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை ஈஷா யோகா மையம், யோகக்கலை, கல்வி, மருத்துவம், இயற்கை விவசாயம், உள்ளிட்ட பல சேவைகளைச் செய்துவருகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு 112 அடி ஆதி யோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்டு சில அமைப்பினர் இந்த மையத்தின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களது குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். பிரதமர் மீது வெறுப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோர், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT