தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: மேல்முறையீட்டு மனு மீது ஜூன் 30-ல் இறுதி விசாரணை

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஜூன் 30-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஜூலை 16-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, மாவட்ட தொடக் கக் கல்வி அலுவலர் பாலாஜி உட்பட 9 பேருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

11 பேர் விடுதலை

தஞ்சை மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உட்பட 9 பேர் தண்டனையை ரத்து செய்யக் கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பிலும், 11 பேரை விடுதலை செய்ததை ரத்து செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி அரசுத் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ் வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் கேட்டு முன் னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு

இந்நிலையில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பின்னர் மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜூன் 24-ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 30-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்களின் மீது இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

          
SCROLL FOR NEXT