பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் திட்டத்தை உடனடியாக தடுத்த நிறுத்த மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சென்னகேசவ மலைத்தொடரில் உற்பத்தியாகும் பாலாறு தமிழ்நாட்டில் 225 கிலோ மீட்டர் தூரம் பாயந்தோடுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முயற்சித்த ஆந்திர அரசின் திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது ஆந்திர அரசு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் உயரத்தை அதிகரிக்கும் வேலையில் இறங்கி உள்ளது.
இதனால், பாலாற்றில் வழிந்தோடும் சிறிதளவு தண்ணீரும் நின்றுபோகும் நிலை ஏற்பட்டு, பாலாறு மொத்தமாக வறண்டு போகும். ஆந்திர அரசு ஒப்பந்தத்தை மீறி பாலாற்றில் பல தடுப்பணைகளை கட்டியதால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீர் தடுக்கப்பட்டுவிட்டது. இனியும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு செல்லக்கூடாது என்று ஆந்திர அரசு திட்டமிட்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
புல்லூரில் தடுப்பு அணையின் உயரத்தைக் கூட்டினால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி பாதிக்கப்படும். மேலும், மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்படும். எனவே, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்தை உடனடியாக தடுத்த நிறுத்த மத்திய, மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.