தமிழகம்

பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்போம்: காங்கிரஸ், முஸ்லிம் லீக் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தாங்கள் பங்கேற்போம் என்று காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெரிவி்த்துள்ளனர்.

சட்டப்பேரவையில், திமுக உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராம சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் உள்நோக்கத் துடன் ஒரு கருத்தை பதிவு செய்தார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க திமுகவினர் வற்புறுத்தினர். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவை தலைவர் கூறினார். முதல்வர் பொதுக்குழுவில் பேசியது உண்மை என்பது மக்களுக்கு தெரியும். அதை அவைக்குறிப்பில் இருந்து ஏன் எடுத்தார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத நிலையில், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற பேரவைத்தலைவர் உத்தரவிட்டார். இது ஏன், எதற்காக நடந்தது என்பது புரியவில்லை. இது எதிர்க்கட்சியை சார்ந்தவர்களை ஒடுக்க நடக்கும் முயற்சி. இதை கடுமையாக கண்டிக்கிறோம். 22-ம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டாம் என்று எண்ணுகிறார்களோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. திமுகவை வெளியேற்றியுள்ளனர். நாளை நாங்கள் எல்லோரும் அவைக்கு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் கூறும்போது, “ இந்த நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கிறது. யாரும் அவை நடவடிக்கைகளை தடுக்காத நிலையில் திடீரென பேரவைத்தலைவர் திமுகவினரை வெளியேற்றியதுடன், கடும் நடவடிக்கை எடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த நட வடிக்கை கண்டிக்கத்தக்கது. நாளை நாங்கள் அவையில் பங்குபெறுவோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT