தமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான பட்டியல் தயார் செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 406 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் காவிரி தண்ணீர் கிடைக்காமலும், குறைந்தளவு பெய்த பருவமழையைக் கொண்டும் சாகுபடி பணியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால், ஆற்றுப்பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் சம்பா பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதென்ற நிலை உருவாகியுள்ளது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மோட்டார் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகளின் நிலங்களில் மட்டும் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் அதிர்ச்சி, தற்கொலை மரணங்கள் அதிகரித்ததை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஆய்வுக்குழுவை அனுப்பி ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஜனவரி 10-ம் தேதி வறட்சி நிதியாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 465 வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அவர் காபந்து முதல்வராக தொடரும் நிலையில் தலைமைச் செயலக பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழக அரசியல் குழப்பங்கள் தீர்ந்து யார் முதல்வராகப் பொறுப்பேற்றாலும் முதலில் விவசாயிகளின் வறட்சி நிவாரணத்தை வழங்கி நற்பெயர் எடுக்க முற்படுவார்கள் என்ற நிலை எழுந்துள்ளதை உணர்ந்து, வறட்சி நிவாரண பட்டியல் தயாரிக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் விவசாயிகள் சாகுபடி செய்கின்ற நிலத்தின் சர்வே எண், அவற்றில் பாதிக்கப்பட்ட சாகுபடிப் பரப்பளவு விவரம், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி மற்றும் வங்கிக்கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டியலில் பூர்த்தி செய்து வருகின்றனர். பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதால் தனியார் டிடிபி சென்டர்கள் மூலமாகவும் விரைவாக மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணப் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது சரிபார்ப்பு பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. நிவாரணத்தொகை முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுவந்த நிலையில், இவ்வாண்டு முதன் முறையாக நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் முறைகேடு புகார்கள் தவிர்க்கப்படும் என்பதுடன் விரைவாக விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை கிடைக்கும்” என்றார்.
முறைகேடு செய்ய முடியாது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியபோது, “இந்த வறட்சி நிவாரணப் பட்டியலில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண்ணும் குறிப்பிடப்படுகிறது. அதுபோல நிவாரணம் வழங்கத் தகுதியுள்ள மற்றும் தகுதியில்லாத நிலத்தின் சர்வே எண்கள் இரண்டையுமே பட்டியலில் குறிபிட்டு நிவாரணம் பெறுகின்ற நிலத்தை அடையாளம் காட்டச்சொல்கின்றனர்.
எனவே, எந்த ஒரு சர்வே எண்ணுக்கும் நிவாரணம் விடுபட்டுள்ளதாகக் கூறி யார் விண்ணப்பித்தாலும் ஆதார் எண் அடிப்படையில் விசாரித்து அதில் உண்மையிருக்கிறதா என்பதை கண்டறிந்துவிட முடியும். எனவே, இவ்வாண்டு வறட்சி நிவாரணத்தில் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.