தமிழகம்

மெரினாவில் போலீஸாரின் தடையை மீறி தமிழின படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற 300 பேர் கைது

செய்திப்பிரிவு

மெரினா கடற்கரையில் தடையை மீறி தமிழின படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற 300 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மே 17 இயக்கம் சார்பில் இலங் கையில் தமிழின படுகொலை நடந்ததன் 8-ம் ஆண்டு நினை வேந்தல் கூட்டம் மே 21-ம் தேதி மெரினா கடற்கரையில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் விதிமுறையை மீறி கூட்டங்கள் நடத்த முற்படுவது சட்டவிரோதம் என்றும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல்துறை நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடை பெறும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்திருந்தார். இதை யடுத்து, மெரினா கடற்கரை முழுவ தும் நேற்று மாலை சுமார் 1,000 போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர். மேலும், நினைவேந்தல் கூட்டம் நடத்த முயல்வோரை கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நபர்களை மாலை 4 மணி முதல் போலீஸார் கைது செய்ய தொடங்கினர். மெரினா கடற்கரைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரித்து அனுப்பினர்.

இந்நிலையில், மாலை 5.45 மணியளவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்ணகி சிலை முதல் நேதாஜி சிலை வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக வந்தனர்.

அதைத்தொடர்ந்து, நேதாஜி சிலைக்கு பின்புறம் தடையை மீறி அவர்கள் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றபோது போலீஸார் தடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மற்றொருபுறம் தமிழக வாழ் வுரிமை கட்சி தலைவர் தி.வேல் முருகன் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளு வர் சிலை முன்பாக திடீரென கூடி மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங் களை எழுப்பினர். பின்னர், அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் நேற்று மாலையில் மெரினா கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. கைதான 300 பேரையும் நேற்று இரவு போலீஸார் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT