பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக கருதப்படும் பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் பெரும்பள்ளம் என்ற பகுதியில் ஏற்கெனவே உள்ள தடுப்பணையின் உயரத்தை இன்னும் உயர்த்தும் ஆந்திர அரசின் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தைச் சுற்றியுள்ள கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் சரியான அளவு கிடைக்காததால் தமிழக விவசாயிகள் நிலை பரிதாபத்திற்குரிய வறுமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் இந்த திட்டம் இன்னும் அதிகமாக அவர்களை பாதிக்கும் என்பதாலும், தமிழ்நாடு பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாண வேண்டும்.
தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் 4.20 லட்சம் ஏக்கர் நிலம் பாசனத்திற்கும், பல நகரங்கள், கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பாலாறு ஏற்கெனவே பாலைவனமாக காட்சியளிக்கும் நிலையில் இந்த புதிய அணையை கட்ட அனுமதித்தால் வடமாவட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை நிரந்தர பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை மிக முக்கிய பிரச்சனையாக கருதி உடனடி தீர்வு காண வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.