அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய அளவில் ஓட்டுநர், நடத்து நர், உதவிப் பொறியாளர் உட்பட 8,137 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாகவும் ஆட்களை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இளை ஞர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22 ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப் படுகின்றன. இவற்றில், தற்போது ஓட்டுநர், நடத்துநர் உட்பட மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இருப்பி னும் ஓட்டுநர், நடத்துநர், தொழில் நுட்பப் பிரிவு, நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன.
தற்போது 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை கணக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3,269 ஓட்டுநர்கள், 2,928 நடத்து நர்கள், 1,486 இளநிலை தொழில் வினைஞர்கள், 181 உதவிப் பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8,137 பணியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. இதற்கான விண்ணப்பம் பெற நவம்பர் 20 கடைசி தேதியாகும். அதேபோல், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 8 கடைசியாகும்.
இது தொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நீதிமன்ற உத்தரவின்படி, போக்குவரத்துத் துறைக்கு வேலைவாய்ப்பு அலு வலகம் மற்றும் நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, நேரடியாகவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஓட்டுநர், நடத்து நர் உரிமம், கல்வி தகுதி, உடல் தகுதி, முன் அனுபவம், இட ஒதுக்கீடு ஆகியவை சரிபார்த்தே ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். எவ்வித முறைகேடுகளும் நடக்காத வண்ணம் கண்காணிக்கப் படுகிறது’’ என்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்துத் துறையில் வரலாற்றிலேயே முதல்முறையாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மூலமே பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பெரிய அளவில் ஆட்களை தேர்வு செய்வது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஏற்கனவே உள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும், நேரடியாக ஆட்களை தேர்வு செய்வதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழக அரசு முறையாக கண்காணித்து, நேர்மையான முறையில் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.
பல்லவன் இல்லத்தில், குவிந்த இளைஞர்கள்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 746 ஓட்டுநர்கள், 610 நடத்துநர்கள் உட்பட மொத்தம் 1,670 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள் நேற்று ஆர்வமாக பல்லவன் இல்லத்தில் நீண்ட தூரத்துக்கு வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.