தமிழகம்

சென்னைக்கு புறப்பட்ட பழங்கால கார் பேரணி- புதுச்சேரி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

செய்திப்பிரிவு

பாரம்பரிய கார்களை பார்க்க புதுச்சேரி கடற்கரையில் சனிக்கிழமை மாலை ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பழங்கால கார்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டது.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, சென்னை பாரம்பரிய வாகன கழகம் மற்றும் தி இந்து நாளிதழ் இணைந்து பாரம்பரிய வாகனங்களை மக்கள் பார் வைக்கு வைக்கும் நிகழ்ச்சி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

ஐந்தாவது ஆண்டாக இந்த முறை, சனிக்கிழமை மாலை மக்கள் பார்வைக்கு பழைய கார்களை வைக்கும் நிகழ்வு நடந்தது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பாரம்பரிய வாகனங்களுக்கான பேரணி புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தொடங்கியது. பேரணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் பழங்கால மாடல்களைச் சேர்ந்த 61 கார்களை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். பலர், அந்த கார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜவேலு கூறியதாவது:

இப்பேரணியில் 1940-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப் பட்ட கார்கள், 1940-ம் ஆண்டுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட கார்கள் என பிரித்து பார்வைக்கு வைத்தனர்.

இதில் 1927-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரையிலான கார்கள் வரிசையாக நின்றிருந்தன. குறிப்பாக 1927-ம் ஆண்டு ஆஸ்டின் கார், 1946-ம் ஆண்டு சிட்ரான், 1936-ம் ஆண்டு ஜாக்வார், 1947-ம் ஆண்டு சிங்கர், 1966-ம் ஆண்டு வி.டபுள்யூ.பீட்டிள், 1967 போர்டு என பலவகைப்பட்ட கார்களை மக்கள் பார்த்து ரசித்தனர் என்றார்.

பழங்கால கார்களை வைத் திருக்கும் பலரும் அக்கார்களை தங்கள் குழந்தைகளை போல் பார்த்துக்கொள்வதாக குறிப்பிடுகின்றனர்.

இக்கார்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதுதான் மிகவும் கடினமான விஷயம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT