ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் வகையில் வக்ஃபு வாரிய சொத்துக்களின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறினார்.
சென்னையில் அமைக்கப்பட் டுள்ள தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவன மண்டல அலுவலகம் மற்றும் மவுலானா ஆசாத் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக தோல் பொருள் உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் திறன் மேம்பாட்டு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பொழுதுபோக்கு மற்றும் ஊடகதிறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலா ளர் ஒய்.பி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, ‘‘கலைத்துறைக்கு சிறுபான்மையினர் பெருமளவில் வரவேண்டும். இங்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மத்திய அரசின் இந்த முயற்சி, சிறுபான்மையினர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். படிப்பு, அதன் பிறகு வேலை என்பதை உறுதி செய்ய திறன் மேம்பாடு அவசியமான ஒன்று’’ என்றார்.
அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா பேசியதாவது: வக்ஃபு வாரிய நிலத்தில் சில ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வக்ஃபு வாரிய சொத்து விவரங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க உள்ளோம். இந்தப் பணியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் சீக்கியம், சமணம், இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், பார்சி என 6 மதங்கள் உள்ளன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு நஜ்மா ஹெப்துல்லா கூறினார்.