சென்னையில் சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க நாணயங்களை விநியோகிக்கும் இயந்திரங்களை நகரின் பல்வேறு இடங்களில் நிறுவும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியில் நாணயத் தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாணயங்களைத் தருவதற்கு ரிசர்வ் வங்கி தயாராக இருந்தாலும் அதை பெற்றுக் கொள்ள அரசுத் துறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பஸ்களில் சில்லறைக்கு தொடர்ந்து கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது தவிர, மக்களிடையேயும் சில்லறை நாணயங்கள் புழக்கம் குறைவாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் சில்லறை நாணயங்களை விநியோகிக்கும் இயந்திரங்களை, வங்கிகளில் நிறுவும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்வேறு வங்கிக் கிளைகளில் இந்த இயந்திரங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில், 100 ரூபாய் நோட்டை போட்டால் அதற்கு ஈடாக ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்கட்டமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அடையார் மற்றும் அண்ணா சாலை (தலைமையகம்) கிளைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வங்கியைத் தவிர, இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளிலும் நாணயம் விநியோகிக்கும் இயந்திரங்களை நிறுவவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் சென்னையில் 54 வங்கிக் கிளைகளில் இந்த இயந்திரங்கள் செயல்படத் துவங்கும்.
வங்கிகளில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களில், ஒரு நபருக்கு எவ்வளவு தொகைக்கு சில்லறை தரலாம் என்ற உச்சவரம்பை அந்தந்த வங்கிகள் நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்த கருவிகளை நிறுவ வங்கிகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும். கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் நிறுவ முன்வந்தால், அவற்றுக்கு மேலும் அதிக ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ‘தி இந்து’விடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர பழைய ரூபாய் நோட்டுகளை தனியார் வங்கிகளிலும் மாற்றித் தரும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்துகிறது.