கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம், புத்தூர் காவல் நிலையம் மீது கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்களும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் காவலர் ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார். 4 போலீஸார் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சுப.இளவரசன், சுந்தரம், லெனின், வெங்கடேசன், அமல்ராஜ், முருகன், குமார், மணிமாறன், நல்லரசு, ரவி மற்றும் இளங்கோமணி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லெனின் என்பவர் வழக்கு விசாரணையின் போது இறந்துவிட்டார். இளங்கோமணி அரசுத் தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் சுப.இளவரசன் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சுந்தரம் என்பவருக்கு மட்டும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, என்.ஆதிநாதன் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.
அதில், சுப.இளவரசன், அமல்ராஜ் மற்றும் குமார் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மற்றவர்களுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.