பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் உமாபாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் பதவி விலக வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார், வி.எச்.டால்மியா, சாத்வி ரிதம்பரா உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். உமாபாரதி தற்போதும் மத்திய அமைச்சராக உள்ளார். கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருக்கிறார்.
குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள உமாபாரதி, கல்யாண் சிங் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செயய வேண்டும். மற்ற கட்சிகளுக்கு அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.