தமிழகம்

கடும் வறட்சியில் கால்நடைகளை காப்பாற்றும் அரிய முயற்சி: பசுந்தீவன உற்பத்தியாளரான பொறியியல் மாணவர்

ர.கிருபாகரன்

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பாதிப்படைந்துள்ளன. கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்காததால் அரசே மானிய விலையில் உலர் தீவனங்களை விற்கத் தொடங்கியது. அதிலும் தட்டுப்பாடு அதிகமாகியிருப்பதால், கால்நடை வளர்ப்போர் பெரும் கவலையில் உள்ளனர்.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், கோவை பெரியநாயக் கன்பாளையத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் தீரஜ்

ராம்கிருஷ்ணா(23), கால்நடை களை வளர்ப்பதுடன், அவற்றுக்கு சத்துள்ள பசுந்தீவனங்களையும் விளைவித்துக் கொடுத்து வருகிறார்.

குறைந்த நீரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, அசோலா வளர்ப்பையும், முளைப்பாரி போன்ற ஹைட்ரோபோனிக் முறையையும் கால்நடை பராமரிப்புத் துறை ஊக்குவித்து வருகிறது.

சென்னையில் சோதனை அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டங்கள், நல்ல பலனை அளித் ததால் கால்நடை வளர்ப்போருக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் புதிய திட்டங்களை நம்ப விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தயாராக இல்லை.

ஆனால், தீரஜ் ராம்கிருஷ்ணா மேற்கொண்டுள்ள முயற்சி, அதிக தீவனத்தை உற்பத்தி செய்வதாகவும், கால்நடை வளர்ப்போருக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. இதுகுறித்து மாணவர் தீரஜ் ராம்கிருஷ்ணா கூறியதாவது:

இந்த ஆண்டுதான் எனது படிப்பு முடிகிறது. ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னதாக கால்நடைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். இப்போது 25 கறவை மாடுகளை வளர்க்கிறேன். தண்ணீர் பற்றாக்குறைக்கு நடுவே எப்படி சத்துள்ள தீவனத்தை உருவாக்குவது என்ற கவலை இருந்தது. 6 மாதத்துக்கு முன்பு கால்நடை பராமரிப்புத் துறை வழிகாட்டுதலோடு, 2 கிலோ அசோலா பாசி வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். இன்று 52 பசுமைத் தொட்டிகளில் இருந்து, தினமும் 40 கிலோ அசோலா பசுந்தீவனமாக கிடைக்கிறது. அதிக தண்ணீர் தேவைப்படாத, அதேசமயம் சத்துள்ள தீவனம் உற்பத்தி செய்ய இதுதான் சிறந்த முறை.

கடந்த 4 மாதத்துக்கு முன்பு, கால்நடை பராமரிப்புத் துறையிடம் இருந்து ஹைட்ரோபோனிக் திட்டம் பற்றி அறிந்துகொண்டேன். முளைப்பாரி விதைப்பு போல தானியங்களைச் சத்துள்ள தீவனமாக விளைவிக்க முடியும் என தெரிந்துகொண்டேன். ஷெட் அமைத்து மக்காச்சோளம் விளைவிக்கத் தொடங்கினோம். 80 கிலோ தானியத்தில் இருந்து நாளொன்றுக்கு 400 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

இதிலும் அதிக தண்ணீரோ, மண்ணோ, பெரிய செலவுகளோ இல்லை. இதுபோன்ற வழிவகைகளைப் பயன்படுத்தி னால் கால்நடைகளை எளிதில் பாதுகாக்க முடியும். சத்தான பசுந்தீவனங்களைக் கொடுப்பதால், தினமும் குறைந்தபட்சம் 250 லிட்டர் தரமான சத்துள்ள பால் கிடைக்கிறது என்றார்.

வெயில் தாக்கத்தைத் தணிக்க மின்விசிறி, பாடல் ஒலிக்க ஸ்பீக்கர் வசதி என மாட்டுக் கொட்டகையில் பல்வேறு வசதிகளையும் செய்துள்ளார் இந்த பொறியியல் மாணவர்.

கோவை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தமிழ்செல்வனிடம் கேட்டபோது, ‘‘வறட்சியை சமாளிக்க நாங்கள் அறிவுறுத்திய அசோலா, ஹைட்ரோபோனிக் திட்டத்தை இந்த மாணவர் செயல்படுத்தத் தொடங்கினார். இன்று முன்மாதிரியான பசுந்தீவன உற்பத்தியாளர் ஆகி இருக்கிறார். இதுபோல மற்றவர்களும் முயற்சித்தால், அதிக தண்ணீர் தேவையில்லாமல் வறட்சியை எளிதில் சமாளிக்க முடியும். கால்நடைகளைக் காப்பாற்ற முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT