தமிழகத்தில் நடக்கும் கௌரவ கொலைகளுக்கு எதிராகவும் கௌரவ கொலைகளைத் தடுக்க தனியாக சட்டம் இயற்றக் கோரியும் பிரச்சார இயக்கத்தை தொடங்கி இருக்கிறது ’எவிடென்ஸ்’ தன்னார்வ அமைப்பு.
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இருபதுக்கும் மேற்பட்ட கௌரவ கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரம் வெளியிட்டிருக்கிறது ’எவிடென்ஸ்’. இந்தக் கொலைகளின் பின்னணிகள் குறித்து கள ஆய்வுகள் நடத்தி, அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறது இந்த அமைப்பு.
ஆயிரம் கொலைகள் - எழுநூறு தற்கொலைகள்
இதுகுறித்து எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஒரு ஆண்டில் இருபது கௌரவ கொலைகள் என்பது பதிவான வழக்குகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வெளியில் தெரியாமல் நடக்கும் கௌரவ கொலைகள் ஏராளம். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதில் பாதிக்கு மேல் காதல் சம்பந்தப்பட்ட கௌரவ கொலைகளே. இதேபோல்
ஆண்டுக்கு 700 பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதிலும் பாதிக்கு மேல் கௌரவ தற்கொலைகள்தான். தலித் இளைஞர்களை காதலித்த குற்றத்துக்காக பெரும்பாலும் சாதி இந்துப் பெண்கள்தான் கௌரவ கொலை செய்யப்படுகிறார்கள்.
பஞ்சாயத்துகளே காரணம்
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கௌரவ கொலைகள் தொடர்பாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், மூன்று வருடங்களுக்கு மேலாகியும் சட்டம் வந்தபாடில்லை. வட மாநிலங்களில் ’காப்’ பஞ்சாயத்துகள்தான் கௌரவ கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதே
போல் தமிழகத்தில் சாதிப் பஞ்சாயத்துகள் கௌரவ கொலைகளும் தற்கொலைகளும் நடப்பதற்கு உந்துதலாக இருக்கின்றன.
மூன்றாண்டுகளுக்கு பிரச்சார இயக்கம்
கௌரவ கொலைக்கு எதிராக ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை தேசிய பெண்கள் ஆணையமும் தேசிய சட்ட ஆணையமும் 2011-லேயே மத்திய அரசுக்கு அறிக்கையாக அளித்திருக்கின்றன. ஆனாலும், மத்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டவும் கௌரவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
மூன்றாண்டுகளுக்கு இந்தப் பிரச்சார இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்’’ என்றார் கதிர்.