பெண் கல்விக்கு ஆதரவான குரல்கள் தற்போது அனைத்து தளங்களில் இருந்தும் ஒலித்து வரும் நிலையில், 68 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்விக்கு வித்திட்டவர் வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனரான வி.எல்.எத்திராஜின் 125-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1890-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி வேலூர் தொட்டபாளையத்தில் லட்சுமணசாமி முதலியார்-அம்மாயி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் எத்திராஜ். அவரது தந்தை லட்சுமணசாமி முதலியார் ஆரம்பத்தில் அரக்கோணம் ரயில்வே பணிமனை ஸ்டோர் கீப்பராக இருந்து ரயில்வே கான்ட்ராக்டராகவும், பின்னர் சிவில் என்ஜினியரிங் கான்ட்ராக்டராகவும் உயர்ந்தவர்.
எத்திராஜின் சகோதரர்களான கோவிந்தராஜ், வரதராஜ் ஆகியோர் தந்தையைப் பின்பற்றி கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், எத்திராஜுக்கு தந்தையின் தொழில் ஈர்க்கவில்லை.
தனக்கென தனிப்பாதையை ஏற்படுத்த விரும்பினார். தந்தை மறைவுக்குப் பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில், கல்லூரி புதுமுகப் படிப்பில் (பியுசி) சேர்ந்தார். அப்போது அவரது தர்க்கவியல் ஆசிரியராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆவார்.
முதல் தலைமை வழக்கறிஞர்
பாரிஸ்டர் படிப்புக்காக தனது 18 வயதில் லண்டன் சென்ற எத்திராஜ், அண்ணன் கோவிந்தராஜின் உதவியால் 4 ஆண்டுகளில் சட்டப் படிப்பை முடித்து பாரிஸ்டர் ஆனார். அதேஆண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் கேத்லீன் என்ற ஆங்கிலப் பெண்ணை மணம் முடித்ததால் பிரச்சினை எழுந்தது.
1913-ம் ஆண்டு சென்னை திரும்பிய எத்திராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை வெற்றிகரமாக தொடங்கி, ஆங்கில வழக்கறிஞர்களுக்கு இணையாக ஜொலிக்கத் தொடங்கினார். எத்திராஜின் அசாத்திய சிறப்பு குணங்கள் இந்திய, ஆங்கில வழக்கறிஞர்கள் மத்தியில் அவருக்கென தனி மதிப்பை ஈட்டித்தந்தது. 1937-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இப்பணிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கல்லூரி தொடக்கம்
வழக்கறிஞராக 47 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த எத்திராஜ் ஏராளமாக பணம் சம்பாதித்தார். விலையுயர்ந்த உடைகள், கார்கள் மீது பிரியம் கொண்ட எத்திராஜ், ‘பெரிய திட்டம் ஒன்றுக்காக பணத்தை சேமித்து வருவதாக’ நன்கொடை கேட்டு வருவோரிடம் கூறிவந்தார். பெண் கல்வி மீது தீராத அக்கறை கொண்ட எத்திராஜ், பெண்களுக்கென தனியாக கல்லூரியைத் தொடங்க முடிவு செய்தார். அந்த காலகட்டங்களில் பெண்களுக்கான தனி கல்லூரி என்பது நினைத்துப்பார்க்க முடியாத விஷயமாக இருந்தது.
எத்திராஜ் கண்ட கனவுப்படி, 1948-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ராயப்பேட்டை ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக 98 மாணவிகளுடன் எத்திராஜ் மகளிர் கல்லூரி உருவானது. 1951-ல் நிரந்தரமாக தற்போதைய இடத்துக்கு மாறியது. மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் பங்கெடுப்பதையும் ஊக்கு வித்தார். தனக்காக யாரும் காத்திருப்பதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.
தோட்ட வேலையிலும் இயற்கையை ரசிப்பதிலும் எத்திராஜுக்கு அதிக ஆர்வம் உண்டு. கல்லூரி வளாகத்தில் பரந்து, விரிந்து வளர்ந்து நிற்கும் மரங்களே அதற்குச் சாட்சி. தவிர டென்னிஸ் விளையாடுவார். கர்நாடக இசைப்பிரியர். உடல்நலக்குறைவால் 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ல் மரணம் அடைந்தார் எத்திராஜ்.
எத்திராஜின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவரது குடும்ப வழியைச் சேர்ந்தவரும், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தற்போதைய தலைவருமான வி.எம்.முரளிதரன், “தனது திறமையை சின்ன வயதிலேயே எத்திராஜ் உணர்ந்துகொண்டார். சட்டம் படிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் எப்படியோ உருவாகியிருக்கிறது. காரணம் முன்மாதிரி என்று கருதுவதற்கு அவரது குடும்பத்தில் வழக்கறிஞர் யாரும் கிடையாது. அவர் வழக்கறிஞர் தொழிலில் அதிக பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், அவரது மனதில் ஏதோ ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.
ஆனால், வெளியே யாருக்கும் அது தெரியவில்லை. தனது சொத்துக்களை விற்று மகன்களுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டு என்பதற்காக மகளிர் கல்லூரியை தொடங்கினார். கார், ஆடம்பர வாழ்க்கை என்று ஒருவகையில் இருந்தாலும் மற்றொரு வகையில் கலை, இசை, இயற்கை மீது ஆர்வம், சமய ஈடுபாடு ஆகிய மென்மையான உணர்வுகளும் அவருக்குள் இருந்துள்ளன” என்றார்.
வெறும் 98 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எத்திராஜ் மகளிர் கல்லூரி தற்போது 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவிகளுடன் ஆல்போல் தழைத்து வீறுநடை போட்டு வருகிறது.