தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்: டி.டி.வி.தினகரன்

பிடிஐ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) பத்திரிகையாளரிடம், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பிரம்மாண்டமான வெற்றியை பெறும்" என்றார்.

முன்பு நீங்கள் இடைத்தேர்தலில் ஆர்வமுடன் இருந்ததாகவும், ஆனால் தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயக்கத்துடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதே என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளிக்கையில், "நான் மட்டுமல்ல அதிமுகவால் தேர்தெடுக்கப்படும் எந்த வேட்பாளரும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தைரியமாகத்தான் உள்ளோம். 1.3 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவினர் யாருக்கும் தயக்கம் கிடையாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ராணுவத்தை போல ஒழுக்கமுடையவர்கள்" என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் ஆணையம் அனுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் அனுப்பியுள்ளார்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT