இந்தியாவில் விலங்குகள் மீது காட்டும் பாசம், பராமரிப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசினார்.
பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா அமைப்பு சார்பில் வருடாந்திரக் கூட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா வேளச்சேரி தி வெஸ்டின் ஹோட்டலில் நடந்தது. விழாவில், இணை நிறுவனர் எஸ்.சுசித்ரா வரவேற்றார். பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஜி.அருண் பிரசன்னா தலைமை வகித்தார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஜெயந்தி, இந்திய விலங்குகள் நலவாரிய துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணா உட்பட பலர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளி்ட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசும்போது, ‘‘இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. நமது பாரம்பரியம், மரபு மற்றும் கலாச்சாரம் தொன்மை வாய்ந்தது. மனிதாபிமானத்தைப் போற்றுவதிலும் மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருக்கிறோம்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே விலங்குகளுக்கும் அதிமுக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. சில விலங்குகளை தெய்வங்களாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இப்போது விலங்குகள் மீது காட்டும் பாசம், பராமரிப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஆயிரக்கணக்கான அடிமாடுகள் மற்றும் அழிவின் விளிம் பில் உள்ள பறவை இனங்களை மீட்டு பாதுகாப்பதில் இந்த அமைப் பின் பணி மகத்தானது. விலங்கு களுக்கு எதிரான சித்ரவதையை இளைஞர்களால் மட்டுமே தடுக்க முடியும்’’ என்றார்.
விஷால் பேட்டி
இந்நிகழ்வில் பங்கேற்ற தென்னிந் திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நடிகர் களும் தயாரிப்பாளராக உள்ளனர். திருட்டு சிடிக்கள், டிவிடிகளை தடுப்பது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவை சந்தித்தோம். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தாணு மற்றும் சிவா ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நானும் ஒரு தயாரிப்பாளராக காத்திருக்கிறேன்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளி யான படம் டிவிடியில் வந்துவிட்டது. எங்களால் முடிந்த அளவுக்கு செயல்படுகிறோம். தயாரிப்பாளர் சங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. வேந்தர் மூவிஸ் மதன் திரும்பி வந்தால், அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக இருக்கும்” என்றார்.