தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில், உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வறட்சி, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பற்றாக்குறை, நீட் தேர்வா? இல்லையா என்ற நிச்சயமற்ற தன்மை, ஆதார் அட்டை இணைக்கவில்லையென்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்ற நிர்பந்தம் என தமிழக மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் செயல் இழந்து கிடக்கின்றன.
கடந்த 5-ம் தேதி முதல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் மிகக் கடுமையானது. ஆனால், ஆளுநர் இந்தப் பிரச்சினை ஆரம்பித்த பிறகு தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு போனதும், வந்த பிறகும் கூட அமைதி காப்பதும் ஏற்கத்தக்கதல்ல.
தமிழக மக்கள் சந்திக்கும் கடுமையான பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒருவாரம் கடந்த பின்பும் எந்த முடிவும் எடுக்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகக்கூடிய கொந்தளிப்பு நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் மத்தியில் விளக்குவதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.
எனவே, உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு ஆளுநர் விளக்க வேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.