இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவர் பழ.நெடுமாறன், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இலங்கை இனப் படுகொலையில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், விளார் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோரிடம் உரிய அனுமதி வாங்கியே இந்த முற்றம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளார் ஊராட்சி மன்றத் தலைவர் விளக்கம் கேட்டு எங்கள் அறக்கட்டளைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்டிடம் கட்டுவதற்காக பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானப் பணிகளில் சில விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாகவும், கிராம ஊராட்சிக்குச் சொந்தமான தெரு மற்றும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கட்டுமானப் பணி நிறைவு பெற்றது குறித்து ஊராட்சித் தலைவருக்கு தெரிவிக்கவில்லை என்றும் அந்த நோட்டீஸில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கெனவே கட்டுமானப் பணிக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு பதிலளிக்கும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்புவது சட்ட விரோதமானது.
ஆகவே, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிராக தமிழக அரசு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தலையீடு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பழ.நெடுமாறன் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை செவ்வாய்க் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.