இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது நல்லவேளை, “நம்மை அழைக்காமல் விட்டார்களே என்று நினைத்துக் கொண்டேன்” என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அரசின் சார்பில் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும்போது, மற்றவர்கள் குற்றம் சொல்ல சிறிதும் வாய்ப்பளிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கர்நாடக கலாச்சார அமைச்சர் அந்த மாநில கலைஞர்களுக்கு போதிய இடவசதி, போக்குவரத்து வசதி, உரிய அனுமதி கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்தபோது, அவர்களை, இருந்த இடத்தில் இருந்து எழுப்பி, பின் வரிசையில் அமரச்செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.
அந்த சாதனைக் கலைஞர்கள் வரும்போது வரவேற்று, அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர வைத்து இருக்க வேண்டும். மாறாக அமர்ந்த பின் அகற்றியது பண்பாடற்ற செயல். இதுதவிர, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்த விழாவிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை என்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பினார்கள். அங்கே அழைக்கப்பட்ட பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, 'நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே; நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே... என்று எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும் 'பெருமைப்படுத்தி'(?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா” என்று குறிப்பிட்டுள்ளார்.