மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 8 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் மொத்தம் 8,800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையம், கதவணை மின் நிலையம் மூலம் 290 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பருவமழை பெய்துவரும் நிலையில், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. தற்போது, மழை குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு மீண்டும் நேற்று முன் தினம் மாலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.63 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,735 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடியும், டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுகிறது.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சுரங்க நீர்மின் நிலையம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கியது. நீர்மின் நிலையத்தில் 80 மெகாவாட் மின் உற்பத்தியும், 7 கதவணைகள் மூலம் தலா 30 மெகாவாட் என 210 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.