தமிழகம்

மர வியாபாரியின் இலவச கல்விச் சேவை: கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணியில் சேர பயிற்சி - இதுவரை 200 பேர் தேர்வாகியுள்ளனர்

கி.ஜெயப்பிரகாஷ்

அரசுப் பணியில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டியில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார் மர வியாபாரி ஒருவர். இந்த மையத்தில் இருந்து இதுவரை 200 பேர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சேகர். மர வியாபாரம் செய்கிறார். கிராமப்புறங்களில் படித்துவிட்டு அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இலவச பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். இங்கு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்விச் சேவை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

10-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதன்பிறகு மரம் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன். கும்மிடிப் பூண்டியைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு படித்து முடித்துள்ள ஏராளமானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தயாராகி வருவதைப் பார்த்தேன். இவர் களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இந்த மையத்தை தொடங்கினோம். இங்கு தினமும் சுமார் 250 பேர் பயிற்சி பெறுகின் றனர். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்று 200 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, விஏஓ, ஆசிரியர் பணி என தேர்வாகி யிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

பயிற்சி மையத்தின் ஒருங் கிணைப்பாளர் முகுந்தன் கூறிய தாவது:

கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் அரசுப் பணிக்கு செல்லவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, கிராமப் புற மாணவர்களுக்கு தரமாகவும், இலவசமாகவும் பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த மையம் 2012-ல் தொடங்கப்பட்டது.

சேவை மனப்பான்மையோடு...

இதற்காக எம்.சேகர் என்பவர் தனது 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தார். அதன்பிறகு நாற்காலிகள், நகலெடுக்கும் கருவி, கம்ப்யூட்டர் என நிறைய பொருட்கள் நன்கொடையாகக் கிடைத்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனாலும், வாரம் முழுவதும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். சேவை மனப்பான்மையோடு இந்த மையம் செயல்படுவதால், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களும் பெரிய அளவில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் பணியாற்று கின்றனர் என்றார்.

இங்கு பயிற்சி பெற்று தமிழக அரசுப் பணியில் இருக்கும் உமா மகேஸ்வரி, ஸ்ரீதர், டில்லிபாய் ஆகியோர் கூறியதாவது:

எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பது கடினம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் வந்து தங்கி பயிற்சி மேற்கொள்ள போதிய பண வசதி இல்லை. கும்மிடிப்பூண்டியிலேயே சேகர் என்பவர் இலவசப் பயிற்சி மையம் நடத்துவதைக் கேள்விப்பட்டோம். அதன்பிறகு அங்கு சேர்ந்து பயிற்சி பெற்றோம். இலவசம் என்றாலும்கூட, மிகச் சிறப்பாக, தரமான பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டது.

அதனால்தான், எங்களால் அரசுப் பணியில் சேரமுடிந்தது. இந்த மையத்துக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு வரவேண்டும். அதற் காக, அந்த பயிற்சி மையத்துக்கு நாங்கள் என்றென்றும் துணையாக இருப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது நாங்களும் நேரில் சென்று, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT