வரலாற்று சிறப்பு மிக்க தமிழக சட்டப்பேரவையை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத் துக்கு மாற்றியது ஏன்? என முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), ‘‘வரலாற்று சிறப்பு மிக்க சட்டப்பேரவை’’ எனக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
திமுக உறுப்பினர் தனது பேச் சின் தொடக்கத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க சட்டப்பேரவை எனக் குறிப்பிட்டார். அதனால் இந்த சட்டப்பேரவையை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்தை கட்டி அங்கு மாற்றினார்களா? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
இந்த அவையில் நடுநாயக மாக பேரவைத் தலைவர் வீற்றிருக்கிறார் என திமுக உறுப்பினர் குறிப்பிட்டார். இதற்கு முன்பு ஒரு நாள் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினரும், இந்த பேரவைத் தலைவர் நாற்காலிக்கு உள்ள வரலாற்று சிறப்பை பற்றி பேசினார்.
ஆனால், இந்த அவையை வேறு கட்டிடத்துக்கு மாற்றும்போது இந்த நாற்காலியை தூக்கி குப்பையில் போட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. இப்போது பேரவைச் செயலாளராக உள்ள ஜமாலுதீன் அதனைக் காப்பாற்றி பத்திரமாக வைத்திருந்தார்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.