கார்த்திகை தீபத்தின்போது அகல் விளக்குகளும், தைப்பொங்கல் நேரத்தில் மண்பானைகளும் தமிழர்களின் கொண்டாட்டத்தில் பிரதான இடம் வகிக்கும். சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இந்த திருவிழாக்களை கொண்டாடினாலும் நோக்கம் மகிழ்ச்சி தான். அதை வழங்குவதில் முக்கிய பங்கு இந்த மண்பாண்டங்களுக்கும் இருக்கிறது.
ஆனால், இவற்றை உற்பத்தி செய்து தரும் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை மட்டும் காலங்காலமாக கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. ஒருகாலத்தில் ஒவ்வொருவர் வீட்டு சமையலறையையும் அலங்கரித்த மண்பாண்டங்கள் இன்று விழாக்கால பயன்பாடுகளுக்கு மட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆரோக்கியம் என்பதை புறந்தள்ளிவிட்டு உடையாத தன்மை, நீண்டகால உழைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் உலோகப் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர்.
இருப்பினும் பரவலாக நடக்கும் விற்பனைக்காக இன்னும் மண்பாண்ட தொழிலாளர்கள் அவற்றை உற்பத்தி செய்து வருகின்றனர். மாதத்திற்கு இரண்டு முறை எகிறும் பெட்ரோல் போன்றவற்றின் விலையுடன் ஒப்பிடும்போது மண்பாண்டங்களின் விலை மிகக்குறைவு தான். அதேபோல நலிவடையும் மற்ற தொழில்களைப் கவனிப்பது போல இதை அரசு கவனிப்பதும் இல்லை.
இதுபற்றி நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பெருமாள் கூறியது:
இந்த தொழிலை விட்டுட்டு மாத்திக்கவும் மனசு வரலை. அதேநேரம் யாராலும் எங்க தொழிலுக்கு விடிவும் வரலை. வர்த்தக ரீதியாக தினசரி பயன்பாடுகளில் மண்பாண்டங்கள் இருப்பது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் எங்கள் வாழ்க்கை ஓரளவு மேம்படும். கைத்தறி நெசவு தமிழர்களின் பாரம்பரிய தொழில் என்று கூறும் அரசு அதை காக்க சில குறைந்த பட்ச நடவடிக்கைகளை எடுக்குது. ஆனா எங்க நிலைமையை பற்றி யாருமே கவலைப்படலை. தற்போது மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டிருப்போரின் காலத்துக்குப் பிறகு இந்த வேலைகளை செய்துதர ஆட்களே இருக்க மாட்டார்கள்.
அப்போது நமது வாழ்வியல் கலைகளில் ஒன்றான மண்பாண்ட உற்பத்தி கலையும் அழியும் நிலையைத் தான் எட்டும். அரசு பண்ணைகளில் நாற்று வளர்ப்பதற்கு தேவையான ஜாடிகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு அரசு எங்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒருசிலராவது இந்த தொழிலை தொடர்ந்து செய்வார்கள்’ என்கிறார்.