தமிழகம்

இடர்ப்படி 2 மடங்கு உயர்வு; ரூ.3 கோடியில் சிசிடிவி கேமரா: காவல், தீயணைப்பு துறையினருக்கு ரூ.209 கோடியில் புதிய சலுகைகள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

காவல் துறையினருக்கான மாத இடர்ப்படி 2 மடங்காக உயர்த்தப் படுவது உட்பட ரூ.209.32 கோடி யிலான 81 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கை களுக்கு பதிலளித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

காவலர்கள், அதிகாரிகளுக்கு அவர்களது பதவி மற்றும் பணிப்பிரிவின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.200-ல் இருந்து ரூ.3 ஆயிரம் வரை இடர்ப்படி வழங்கப்படுகிறது. இது 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படும். காவல் பணியாளர்களுக்கு பதவித் தரத்துக்கேற்ப சீருடை, உபகரண பராமரிப்புப் படி ரூ.100-ல் இருந்து ரூ.450 வரை வழங்கப்படுகிறது. இது மாதம் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்படும்.

கடலூர், தேனி, நெல்லை, நாகை, தருமபுரி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் காவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படும். தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயுதப்படை நிர்வாக கட்டிடங்கள், ஆயுதக்கிடங்கு, சமுதாய நலக்கூடம், காவல் நிலைய சொந்த கட்டிடங்கள், சிறப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் என ரூ.72.37 கோடிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

புல்லட் புரூப் ஜாக்கெட்

காவலர்களுக்கு 100 குண்டு துளைக்காத பொதியுறைகள் (புல்லட் புரூப் ஜாக்கெட்) வாங்கப் படும். தமிழகத்தில் 100 காவல் நிலையங்களுக்கு ரூ.3 கோடியில் சிசிடிவி கேமராக்கள், ஐபி கேமராக்கள் வாங்கப்படும். சென்னை மாநகர காவல் கட்டுப் பாட்டு அறை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, நுண்ணறிவு செயலாக்க மைய வசதியுடன் ரூ.12.22 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

சமூக ஊடகங்களில் இருந்து நுண்ணறிவு தகவல்களைப் பெற, ரூ.32 லட்சத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ரூ.1.92 கோடியில் 100 அவசரகால ஒளியூட்டு கருவிகள் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 15 புதிய நீர்தாங்கி வண்டிகள், 5 சிறிய நுரை கலவை தகர்வு ஊர்திகள் ரூ.6.95 கோடியில் வாங்கப்படும். சென்னை தண்டையார்பேட்டை, தி.நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ.2.24 கோடியில் சொந்த கட்டி டங்கள் கட்டப்படும். ஜீப், மோட்டார் சைக்கிள், புகைப் பட, வீடியோ கருவிகள் ரூ.99.56 லட்சத்தில் வாங்கப்படும். ஏப்ரல் 14-ம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்க தீயணைப்பு நிலையங் களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

தீயணைப்பு வீரர்களுக்கு தற்காப்பு உடைகள், காலணிகள் ரூ.50 லட்சத்தில் வாங்கப்படும். வான்நோக்கி நகரும் ஏணி ஊர்திகளை இயக்கும் பணியாளர் களுக்கு மாதம் ரூ.1,000 சிறப்புப் படி வழங்கப்படும். தீயணைப்புத் துறை இசைமேள குழுவுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.1,200-ல் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த் தப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT